Friday, October 10, 2014

ஒரு ரூபாய்


'டேய் ராசு. டேய் ராசு.. எங்க போய்ட்டான் இவன்?' யோசித்தவாறே குடிசையை விட்டு வந்தாள் பார்வதி. பார்வதி ராசுவை தேடும் முன்பு, ஊருக்கு ஒதுக்கு புறமாய் சுடுகாட்டிற்கு அருகில் இருந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுக்க ஊர் தலைவர் கிட்ட அனுமதி வாங்கி, கடன உடனையும், கையில் இருந்த கொஞ்ச பணத்தையும் வச்சு ஒரு வழியா குடிசையும் போட்டாச்சு, நானும் இனிமே ஒழுங்கான குடும்பஸ்தானகி போனான் பார்வதியின் புருஷன் கருப்பன். ஏற்கனவே இருந்த பொறம்போக்கு நிலம் எல்லாம் பட்டா போட்டகிவிட்டது. மொரம்பொக்கு நிலம் சுற்றி கம்பி வெளியும் வந்தாயிற்று. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளுக்கும் இனி அதற்குள் அனுமதி இல்லை.  இவ என்னமோ தச்சு மளிகை கட்டிவிட்டதுபோல பக்கது வீடு, இல்ல குடிசைல இருக்கற அம்சா அந்த சிலுப்பு சிலுத்துகொண்டாள்  சின்ன பைய கார்த்திக்கு பால் கேட்டதற்கு. "ஏதோ பக்கத்துல கொழந்தையோட இருக்காளே.. அவகிட்ட கேட்டா கொஞ்சம் பால் கேட்டதுக்கு சகலத்தையும் கேட்டமாதிரி மொரச்சுகுட்டு இல்லேங்கற.? இவ மட்டும் ஒழுகாத சாலைல[குடிசை] இருக்கணும்.. நாங்க மட்டும் அப்டியே  மழைல ஒழுகிட்ட இருக்கற சாலைல கெடக்கணும். ஒரு சாலமேஞ்சதுக்கு இப்படி அங்கலாப்பு படகூடதும்மா.." என்று தன் மனக்குமுறலை வெளிபடுத்திவிட்டு, குடிசைக்கு உள்ளே போய், செலவு டப்பாவில் இருந்து மஞ்சள் படிந்த பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்துவிட்டு, நடு விட்டத்த தாண்டி இருக்கற ஒரு கனமான குச்சியில்  போன பொங்கலுக்கு அரசாங்கம் கொடுத்த சேலையில் கட்டிய தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த கார்த்திகை மெதுவாக சேலையை விளக்கி பார்த்தாள்.  கையை கன்னத்தில் வைத்து தூங்கி கொண்டு தான் இருந்தான். "மணி ரெண்டாக போகுது. எப்படியும் இன்னும் சித்தநேரத்துல என்திருச்சுருவான்.  அதுக்குள்ள கடைக்கு போயிட்டு வர முடியாது" என கணித்துவிட்டு, "இந்த பால்காரன் வேற ரெண்டு மூணு நாளா வரல. யார அர்ரெஸ்ட் பண்ண இவனுகளுக்கு என்ன.? பஸ் காரன்ல இருந்து, பால்காரன் வரைக்கும் பந்த். பாக்கெட் பால் வேற நல்ல இருக்காது. வேற வழி இல்லையே" என்று நொந்து கொண்டும்,   ராசுவை போய் பால் வாங்கி வர சொல்லலாம் என குடிசையை விட்டு வந்தாள்.

குடிசைக்கு பின்புறம் வந்து, முன்ன பின்ன பார்த்தாள். தூரத்தில் கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்த வருங்கால கிரிக்கேடேர்ஸ் ஒரு கும்பல் தெரிய, மீண்டும் தன்னுடைய கணீர் குரலால் 'டேய் ராசு..' என கூப்பிட்டாள். அதில் ஒரு ஒல்லியான உருவம் கொண்ட பையன், 'என்னம்மா..' என்று கவனம் கலையாமல் பந்தை பார்த்து கொண்டே கேட்டான். 'இங்க கொஞ்சூண்டு வந்துட்டு போடா கண்ணா கடைக்கு போய் தம்பிக்கு பால் வாங்கிட்டு வாப்பா' என்றாள் குரலின் தன்மையை சற்றே மாற்றி. 'ஒரு ரெண்டு பால்மா.. வந்துடறேன்' என்றான். 'எப்ப பாரு கிரிக்கெட்டு கிரிக்கெட்டு.. இரு உங்கப்பா வரட்டும்' என்பதை மட்டும் மெதுவாக சொல்லிவிட்டு, 'அட.. அவன் என்திரிக்கறதுள்ள வாங்கிட்டு வாடா.. இல்லன அவன் அழுகாச்சிய நிறுத்த மாட்டான். சீக்கரம் வாடா' என்று உரக்க, அதே சமயம் மெதுவாகவும் கத்தினாள்.

மூச்சிரைக்க ஓடிவந்து, 'போறேன். ஆனா எனக்கு ஒருருபா தரனும் பூமர் வாங்க.?' என்று முட்டுக்கட்டை போட்டன்.
'டேய்.. உனக்கு இப்ப எதுக்கு காசு.? பால் வாங்கிட்டு வர்றதுக்கு கூலியா? வர்ற கூலிகாசே ஒழுங்கா வீடு வரமாட்டேங்குது. இதுல இவன் வேற. இரு வர்றேன் என்று குடிசைக்குள் சென்று,  ஒரு ரூபாய் காசு ஒன்றை கடுகு டப்பாவில் இருந்து எடுத்து வந்தாள். 'சீக்கரம் வாடா அவ என்திரிக்கரதுக்குள்ள' என்றவாறு, குடிசைக்குள் போக, தனது மோட்டர் சைக்கிள்ஐ காலில் உதைத்து, வாயால் சப்தமிட்டுக்கொண்டே கடையை நோக்கி ஓடினான்.

பூமர் வாங்கலாமா.. செனட்டர் ப்ரெஷ் வாங்கலாமா என யோசித்துக்கொண்டே, ஊருக்குள்ள இருந்த சிறு மளிகை கடைக்கு வந்தான்.
'தாத்தா.. கால்லிட்டர் பால்' என்று,  வலது பைக் ஹன்ட்ல்பாராய் இருந்த கைக்குள் இருந்த பத்து ரூபாயை எடுத்து நீட்டினான் ராசு.
'டேய். கால் லிட்டர் பணன்றுபாடா, இன்னும் ரெண்ட்ருபா கொடு.' என்றார் அந்த தாத்தா வயதில் இருந்த பெரியவர்.
'தாத்தா.. கால்லிட்டர் பத்து ரூபா தான' என்று  தனக்கு தெரிந்த 3 வகுப்பு கணக்கை கேட்டான் பெரியமனுஷதனமாக.
'கருப்பன் பயனுக்கு வெவரம் எல்லா நல்ல கேக்க வருதே' என ஆச்சர்யமாய் கேட்டுகொண்டே, "ரெண்டு நாளா, பால் பாக்கெட் போடறவன் வரலப்பா. இங்க இருந்து பக்கத்துக்கு டவுனுக்கு போய் ரிஸ்க் எடுத்து, பெட்ரோல் செலவுபண்ணி வாங்கிட்டு வரவேண்டி இருக்கு. அதன் ரெண்டுரூபா ஜாஸ்தி.' என்றார் தன் விலையை ஞாயபடுத்தி.

இது வரை இறுக மூடியிருந்த, இடது ஹன்ட்ல்பாராய் இருந்த இடது கை இப்போது விரிய ஆரம்பித்தது ராசுவுக்கு.
ஒரு ரூபாயை தாத்தாவிடம் நீட்டி, 'தாத்தா.. ஒரு ரூபாதான் இருக்கு. திரும்ப வர்றப்ப மீதி ஒருரூபா தர்றேன்' என்றான்.

அந்த ஒரு ரூபாய் திரும்ப வரபோவதில்லை என முடிவு செய்தாரோ அல்லது சரி போகட்டும் ஒரு ரூபாய் லாபமே என்று நினைத்தாரோ, எதுவும் பேசாமல், ஒரு ரூபாயை வாங்கி கொண்டு, பிரிட்ஜை திறந்து, பால் பாக்கெட்ஐ எடுத்து வந்து கொடுத்தார்.

திரும்பி வீதி வழியாக ஒரு கூட்டம், கைகளில் கட்சி கொடிகளுடன், கூச்சலிட்டு கொண்டு சென்றார்கள். அந்த கூட்டத்தில், காலையில் தலைவனின் விடுதலைக்காக உயிரை கொடுத்து கத்தி கொண்டிருந்தான் கருப்பன் 'விடுதலை செய்.. விடுதலை செய்.. எங்கள் தலைவனை விடுதலை செய்.'

ஒரு கையை மீண்டும் இறுக்கி ஹன்ட்ல்பாராய் மாற்றி கொண்டு, மறுகையால் பால் பாக்கெட்டை சுமந்த படி, ராசுவின் மோட்டார்சைக்கிள்   வீட்டை நோக்கி விரைந்தது.

***************முற்றும்********* போராட்டம் அல்ல.. பால் விலையும் அல்ல..


3 comments:

  1. Highlight was the ending phrase
    முற்றும்*போராட்டம் அல்ல.. பால் விலையும் அல்ல
    Nice one

    ReplyDelete