Monday, October 27, 2014

பூனைக்குட்டி




'எப்படியோப்பா..நீ ஊருக்கு வர்றேன்னு சொன்னதே, ரொம்ப சந்தோசமா இருக்கு.'
.....
'டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டே இல்ல? '
..
'என்ன தேதி? தீபாவளிக்கு முன்னாடி தான?'
..
'சரி.. அப்பா கிட்ட போன் தரட்டுமா? நீயே ஒரு வார்த்த சொல்லிடு'
...
'சரிப்பா.. நீ பேச வேணாம். காயத்ரி கிட்ட போனை கொடு. நா பேசிக்கறேன்' முடியை சரி செய்தவரே, திரும்பி தன் கணவனை பார்த்தாள் சிவகாமி. கொஞ்ச நேரம் முன்னாடி தெரிந்த சந்தோச பிம்பம் நொடி பொழுதில் காணாமல் போயிருந்தது முருகேசனிடம். கட்டிலில் இருந்து இறங்கி வெளியே சென்றார் முருகேசன். சிவகாமியின் எப்பொழுதுமான கேள்விகளும் பதில்களும், காயத்ரியின் கேள்விகளும், பதில்களும் முருகேசனின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.நடக்க நடக்க, மெதுவாக சிவகாமியின் குரல் மறைந்து, அந்த தென்னை மர காற்றின் சப்தம் கேட்க தொடங்கியது. நடந்து சென்று, கிணற்றின் அருகில் இருந்த தொட்டியின் விழும்பில் அமர்ந்தார். முக்கால்வாசி  தென்னை மரங்களில் இப்போது பாளை பிடித்து, பூ விட ஆரம்பித்திருந்தது.  சில மரங்களில் குரும்பைகளும், இளநீருகளாகவும் காய்த்திருந்தன. முன்பு ஒருநாள் கன்றுகளாய் நட்ட நாள் முருகேசனுக்கு நினைவிலாட, கூடவே அந்த துர்சம்பவமும் அவனுக்கு நினைவில் வந்தது. இவனை அறியாமல், கண்களில் நீர் வழிந்தது.  முருகேசனின் பின்னல் நிழலாட, கண்ணை துடைத்துக்கொண்டு, திரும்பி பார்த்தான். சிவகாமி நின்று கொண்டிருந்தாள்.
'எப்போ வர்ரனாம்?' என்றார் எங்கோ பார்த்து கொண்டு.
'தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி.' என்றாள்.
'காயத்ரி எப்படி இருக்கா? எவ்ளோ நாள் இருப்பாங்க?' கேட்டுகொண்டே, எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
'அவ நல்ல இருக்கா. ரெண்டு வாரமாம்.  கவினும்.' என்றவள், முருகேசனின் முகம் மாறியதை அறிந்து அமைதியானாள்.
'சரி. வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும். ஆளுகள வரசொல்லிருக்கேன். மொத்தம் ஒரு 4 பேர் வருவாங்க. பாத்துக்க' என்றவர், சிறு அமைதிக்கு பின், 'நான் மட்டும் அன்னிக்கு அவ்வளவு அவசர படாமல் இருந்திருந்தால், இன்னைக்கு என் பேரனுக்கோ பேத்திக்கோ ரெண்டுமூணு வயசு ஆகிருக்கும். இல்ல?' என்றார்  எங்கோ பார்த்து கொண்டு.
 'ஏங்க இப்படி எல்லாம் பேசறிங்க? அன்னிக்கு நடந்தது விபத்து. குக்கர் வெடிக்கும்னு நம்ம என்ன கனவா காண முடியும்? அன்னிக்கு நான் கல்யாணத்துக்கு போயிருக்கவே கூடாது.' என்றாள் சிவகாமி.
'இல்லை. அன்னிக்கு நா கொஞ்சம் கோவபடாம இருந்திருக்கணும். கோவமா போன்ல பேசிட்டு அவசரமா வெளியகெலம்பியதுதான்  காயத்ரி அவசர அவசரமா சமைக்க காரணம். அதனால தான். என் வம்சம்  துளிர் விடும் முன்னே கறிகிடுச்சு.' என்று அழ ஆரம்பித்தார்.
'அழாதீங்க. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. கவினை நம்ம பேரனா ஏத்துக்கலாம்ங்க.'
திரும்பி சிவகாமியை பார்த்தவர், வேகமாக வீட்டுக்கு போனார்.

'பையன் வர்றானு வீடே அமக்களப்படும் போலவே' என்றவாறு வீட்டு திண்ணையில் உக்கார்ந்தார் முருகேசனின் நண்பர் சாரதி. வீடு மொத்தமும் பெயிண்ட் அடிக்க ஆட்கள் வந்திருந்தனர். அவர்கள் வேலையை ஆரம்பிக்கவும் செய்திருந்தினர். சில சுவர்களில் புது வண்ணங்கள் ஜொலிக்கவும் ஆரம்பித்திருந்தது.



'வாங்கணா. ஆமாண்ணா.. மூணு வருஷம் கழிச்சு வர்றான். அதான். அவரு இப்பதான் தண்ணி எடுத்துவிட தெற்கு தோட்டம் போயிருக்காரு. வர்ற எப்படியும் ஒரு மணி நேரம்ஆகும். காபி சப்பட்ரீங்கள?' என்றாள் சிவகாமி.
'கொஞ்சம் குடுமா. அமெரிக்கா போய் மூணு வருஷம் ஆகிடுச்சா. வரட்டும் இந்த ரகு. இங்க எங்கயாவது மாத்திட்டு வர சொல்லலாம். போன் பண்ணான?' என்றார் வெகு உரிமையாக,  சமயலறையில் இருந்தவாறே பதில் கூறினாள், 'நேத்து பண்ணிருந்தான். அப்பா கிட்ட பேசறயநு கேட்டேன். மட்டேனுட்டன்.'
'என்னமா செய்ய. இப்படி ரெண்டு பேரும் பிடிவாதம் பண்ண என்ன பண்ண?'
'காயத்ரி மாசமா இருக்கறப்பவே அந்த ரகு பையன் தத்து எடுக்கனும்னு வந்து நின்னான். அப்பவே இவன் சரின்னு சொல்லிருந்தா, பிரச்னை இல்லாம போயிருக்கும். இவன்தான் புடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டனே.' - இது சாரதி. முருகேசனின் உற்ற நண்பர். முருகேசனின் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம், பிரச்னை என்றாலும், இவருக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது.
'ரகு மட்டும் சும்மாவா இருந்தானா என்ன? இவரு வேணாம்னு சொல்லியும், கவினை தன் பிள்ளையா தத்து எடுத்துகிட்டானே? கவினுக்கு இப்போ ரெண்டு வயசுனா. இதுவரைக்கும் அவனை பார்த்தது கூட கிடையாது' சொல்லிக்கொண்டே காபிஐ நீட்டினாள் சிவகாமி.
'சரி விடுங்க. அதான் அவனே வர்ரன்ல. பாத்துக்கலாம். ரேணு எப்படி இருக்காண்ணா? தீபாவளிக்கு வர்ராங்கள?' கேட்டாள்.
'ஹ்ம்ம். வர்றாங்க. ஒரு ரெண்டு வாரம் இருப்பாங்கனு நெனைக்கறேன். மாப்பிளைக்கு ரெண்டு நாள்தான் லீவ் போல. அவரு தீபாவளி அன்னிக்கு தான் வர்றார். ரேணுவும் பேத்தியும் நாளை கழிச்சு வர்றாங்க.' என்றார் காபிஐ குடித்தபடி.
'இப்படி எதாச்சும் விசேசம்னா தான் எல்லாரையும் பாக்க முடியுது. மெட்ராஸ்ந என்ன, அமெரிக்கானா என்ன. நமக்கு எல்லா ஒன்னுதாண்ண.' என்றாள் சிவகாமி.
'அதென்னமோ வாஸ்தவம்தாம்மா. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. பாருங்க. ரேணுவும்  ஐஷும் வந்தா, வர சொல்றேன். சரிமா. டைம்ஆச்சு நா கெளம்பறேன். சாயந்திரமா அவன கோயில்ல பாக்கறேன்னு சொல்லு' என்று கூறிவிட்டு, எழுந்தார்.
'ஹ்ம்ம். சரிண்ணா' என்றவள், பெயிண்ட் அடிப்பவர்களின் மேல் கவனத்தை செலுத்தினாள்.


இரண்டு வாரம் கழித்து, வீடு முழுதும் புத்தம் புது பெயிண்ட் வாசனை நிரம்ப, ஜொலித்தது. ரேணுவும் அவளது மகள் ஐஷும் வந்திருந்தார்கள்.
ரேணுவும் சிவகாமியும் சமயலறையில் பேசிகொண்டிருக்க, இரண்டு தாத்தாக்களும், 4 வயதான பேத்தியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், திணறி கொண்டிருந்தனர். முருகேசனின் வீட்டில் இருந்த பூனை, குட்டிகள் போட்டிருக்க, அதை பற்றி, ஐஸ்வர்யா கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.
'முருக் தாத்தா, ஒன், டூ. 2 கிட்டேன்ஸ்ம் இந்த கேட் தான் அம்மாவா?' முருகேசனை முருக் தத்தா என்றே கூப்பிடுவாள்.
'ஆமாடா செல்லகுட்டி. நீ எப்படி ரேணுக்கு செல்ல குட்டியோ, அதே மாதிரி இந்த குட்டிகளுக்கு, இந்த பெரிய பூனை தான் அம்மா.' என்றார் கன்னத்தை கில்லி கொண்டே.
'அப்படியா தாத்தா. அப்போ இந்த குட்டியோட டாடி? இந்த குட்டிகளுக்கும் தாத்தா, பாட்டி எல்லாம் இருக்காங்களா?' என்றாள்.
'ஹா.. ஹா.. ஆமா தங்கம். அதுகளுக்கும் பாட்டி, தாத்தா எல்லாம் இருக்காங்க. அவங்க எல்லாம் தோட்டத்துல இருக்காங்க.' என்றார் சிரித்தபடி.
'உங்களுக்கு வேற வேல இல்ல. குட்டி போட்டு ரெண்டு வாரம் ஆச்சு. கண்ணு மொளச்சு, நல்ல கொஞ்சம் வளந்திடுச்சு. பேசாம கொண்டு போய், இத எங்காவது விட்டுட்டுவாங்கனு சொன்னா கேட்டதான?' என்று பொருமியாவரே காரம் இனிப்பு தட்டுக்களுடன் வந்தாள் சிவகாமி.
'இவ ஒருத்தி. இதுக குட்டிக. இதுகள கொண்டு போய் எங்க விட சொல்ற? பாவம் அதுக. உங்க பாட்டிக்கு கொஞ்சம் கூட வெவஸ்த்தையே கெடயாது. நீயே சொல்லு ஐஷு குட்டி. இத கொண்டு போய் எங்காவது விட்டா, அது பாவம் தான? ' என்றார் ஐஷுவை கையில் தூக்கி கொண்டு.
'ஒரு வாரம் பொறுத்துக்க. நம்ம தோட்டத்துல இருக்கற சுப்பிரமணி வீட்ல ஒரே எலி தொல்லையாம். அவனுக்கு இந்த ஒரு குட்டிய கொடுத்து விட்டுடறேன்.'

'தாத்தா. அப்போ இந்த குட்டி, அம்மாவை விட்டுட்டு இருந்துக்குமா? அம்மாவை விட்டு பிரிஞ்சா, பாவம் இல்ல? அது மில்க் எல்லாம் என்ன பண்ணும்?'
'ஹ்ம்ம். என்ன பண்ணும்? இந்த குட்டிய யார் எடுத்துட்டு போராங்களோ, அவங்க இந்த குட்டிய நல்ல பாத்துக்குவாங்க. நல்லவங்களா பாத்து குட்டிய கொடுக்கணும்.'
ஐஷு கேள்வி கேட்க, கேட்க, முருகேசனுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறைவதை, கவனிக்க தவறவில்லை சிவகாமி. இதுதான் சமயம் என்று, 'என்ன பாத்து கொடுத்து என்ன பிரயோசனம் ஐஷுகுட்டி..
அது நல்ல இருக்கா, இல்லையானு யார் பாப்பாங்க? வாங்கிட்டு போறவங்க, கண்டுக்காம இருந்திடலாம். இல்லையா?' என்றாள் சிவகாமி. முருகேசனின் முகம் மாறியது.

'முருக் தாத்தா.. நீங்க வொர்ரி பண்ணாதீங்க.  நாவேணா ஒரு குட்டிய எங்க வீட்டுக்கு எடுத்துக்கவா? நா நல்ல பாத்துக்கறேன். டெய்லி மில்க், பிஸ்கட் எல்லாம் கொடுத்து, நல்ல பாத்துக்குவேன்.'

ரேணு,'ஐஷு.. நோ. டாட் வென்ட் லைக் இட்.  நம்மாள இதெல்லாம் அபர்ட்மெண்ட்ல வச்சு, பாத்துக்க முடியாது.' என்றாள் கண்டிப்புடன்.

'அதெல்லாம் முடியாது. தாத்தா இந்த குட்டிய எங்கயாவது விட்டா, அது பாவம் தான. அது என்ன பண்ணும்? நம்ம வீடு தான் பெரிய வீடுல. அங்க இத வச்சுக்கலாம். தாத்தா, தத்தா ப்ளீஸ் தாத்தா, நீங்க சொல்லுங்க. ப்ளீஸ்.' என்றாள் தாத்தாவின் தாடையை தடவியாவாறே.

'ஹா ஹா. சரிம்மா. ஆனா அம்மா சொல்றதுலயும் ஞாயம் இருக்கில்ல. அங்க டவுன்ல வச்சு வளர்த்த முடியாதுமா. அதுவும் இல்லாம, அங்க நிறைய பெரிய பெரிய ரோடு, பெரிய பெரிய வண்டியெல்லாம் வரும். பூனாச்சியால ரோடு கடக்க தெரியாது. நீயும் ஸ்கூல் போய்டுவா. இல்லையா? அதனால, இந்த பூணாச்சி குட்டி இங்கயே இருக்கட்டும். நீ எப்போ இங்க வர்ரயோ, அப்போ அது இங்கயே இருக்கும். சரியா?' சமாதனபடுத்தினார்.

'வேணாம் முருக் தாத்தா. நா நல்ல பாத்துப்பேன். என் ரூம்ல அதை பத்திரமா வச்சுக்குவேன். வெளில போக விடமாட்டேன்' என்றாள் விடாபிடியாக. சிறிதாய் அழவும் செய்தாள்.

'ஐஷு. சொன்ன கேக்கணும். அடம்பிடிக்க கூடாது' அதட்டினாள் ரேணு.

'சரிமா. அழாத. இதுக்கு நா ஒரு ஓசனை சொல்றேன். கேக்கிறியா? இந்த பூணாச்சி குட்டிய, உங்க தாத்தாக்கு கொடுத்துடறேன். அவரு வீட்ல நீ இருக்கறவரைக்கும் பாத்துக்க. அப்பறமா தாத்தா பாத்துக்கட்டும். நீ எப்போ எல்லாம் ஊருக்கு வர்றியோ, அப்போ எல்லாம் நீ அதுகூட விளையாடலாம். என்ன சரியா?' என்றார் முருகேசன். ஒருவாறு சமாதானம் ஆனாள், ஆனாலும், அவளது கேள்விகளை தேம்பல்களுடன் தொடர்ந்தாள்.

இரவு, முருகேசன் யோசனையுடன் கட்டிலில் படுத்திருக்க, சிவகாமி அவ்வோசனையை புரிந்தவளாய், 'என்ன.. யோசனையெல்லாம் பலமா இருக்கு?' என்றாள்.

'கையை தலைக்கு கொடுத்தவாறு, 'ஐஷு ரொம்ப சுட்டி.. கெட்டிகாரி.. இல்ல?' என்றார்.
மெலிதாக சிரித்தவாறே, 'அப்படியா?' என்றாள்.
'ஹ்ம்ம். எவ்ளோ கேள்வி.. எவ்ளோ அழகு.'
'ஹ்ஹ்ம்ம்ம்' - சிவகாமி
'அந்த பையன் பேரு என்ன?' என்று வேண்டுமென்றே கேட்டார்.
தெரிந்தும், 'எந்த பையன்?' என்றாள்.
'அதான். காயத்ரியோட பையன்.' என்றார்.
'அது எதுக்கு இப்ப உங்களுக்கு? அதான் வேணான்னு சொல்லியாச்சுல?' என்றாள்.
'ஹ்ம்ம். அது சரி. இப்ப அவனுக்கு ரெண்டு வசயிருக்குமா?'
'ஹ்ம்ம் ஆமா.' - இது சிவகாமி.
'அவனுக்கு என்ன புடிக்கும்?'
................
..........
....
..


நட்சத்திரங்கள் வானில் நிறைந்திருக்க, வீட்டின் அருகில் இருந்த ஒற்றை தென்னை மரத்தில் பாளை வெடித்து பூத்திருந்த பூக்கள், வாசலில் விழ ஆரம்பித்தன.

**********

3 comments: